வெள்ளி, 10 ஜூலை, 2009

திருமாலனாரின் பரவியல் கோட்பாடு

ஆங்கிலத்தில் "யுனிவர்சல் " என்பதையே தமிழில் "பரவியல்" என்கிறோம். சிலர் இதனைப் பரந்த மனப்பான்மை என்பர். பரந்த மனப்பான்மை பற்றி முதன் முதலில் கருத்து அறிவித்தவர்கள் தமிழர்களே ஆவர். அதற்குச் சில எடுத்துக் காட்டுகளைக் காட்டலாம்.

௧. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புறநானூற்றில் கணியன் பூங்குன்றனாரும்
௨. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று திருமூலரும்
௩. தாமின்புறுவது உலகினபுறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் என்று திருவள்ளுவரும்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தெளிவாகச் சொல்லிச் சென்றுள்ளனர் . முந்தைய காலத்தில் பிற இனத்தவர் அவர்களைத் தவிர்த்து மற்றவரை இழிவு படுத்தியே வந்துள்ளனர்.
பேய்கள்
பிசாசுகள்
மிலேச்சர்கள்
சூத்திரர்கள்
நாகரிகமில்லாதவர்கள்
என்றெல்லாம் பிற இனத்தவர் மாந்த நேயம் இல்லாமல் கூறி வந்த வேளை தமிழர் மட்டுமே உலகப் பொதுமையையும் பரவியல் கோட்பாட்டையும் வலியுறுத்தியுள்ளனர் என்பதை வரலாற்றைப் பார்த்தால் தெரிய வரும்.
தொடரும்

வியாழன், 9 ஜூலை, 2009

மெய்யுணர்வு

௨0.0௭.௧௯௭௮ காலை ௧0.00 மணி அளவில் அன்பர் ஒருவர் மறைமலை அடிகளின் தொலைவில் உணர்தல் எனும் நூலைப் பற்றிப் பாவலர் ஐயா திருமாலனார் அவர்களிடம் கேட்ட ஐயத்திற்கு அளித்த விளக்கம்
ஐம்பெரும் பூதங்கள் கலந்ததே விண் வெளி என்றும் அதனுள் அமையப் பெறுவதே ஞாலமும் மற்றவையும் என்றும் இவ்வித நுணுக்கமாக அமைந்த விண்வெளியில் மிகவும் நுணுக்கமாக அமைந்ததே மனவெளி என்று அடிகளார் தம் நூலில் விளக்கப் படுத்தி இருந்தாலும் இவ்வுண்மை மெய்மத்தை கடந்த ௧0 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணர்ந்து வந்துள்ளேன் என்பதையும் மேலும் மன வெளி என்பது மன உணர்வேயாகும் என்றும் மன உணர்வென்றால் அது இருவகைப் படும் அதாவது மனத்திற்கு நன்மை தீமையைப் பகுத்துணர இயலாது என்பதால் இவை இரண்டு வகையான உணர்வுகளையும் ஐம்புலன்கள் வழி மனம் பெறும் ஆயினும் இவ்வாறு மனம் பெறுகின்ற உணர்வுகளில் நன்மை தீமை எனப் பகுத்துணர்ந்து நடுநிலையான நன்மையான உணர்வுவழி மனத்தை ஒடுக்குவதன் வழி மன உணர்வினை மெய்யுணர்வாகப் பெறலாம்.
மெய்யுணர்வாகப் பெற்றவர்கள் மனம் மிக நுண்ணிய காலவினைகளையும் உணர வல்லது என்று விளக்கியதோடு இவ்வாறு இம் மெய்யுணர்வு பெற்றோர்கள் மெய்யறிவாளர்கள் எனப்படுவர். இம் மெய்யறிவால் தம் மனத்துள் எழும் அனைத்து உணர்வுகளையும் தெள்ளிதின் அறிந்திட இயலும் . எவ்வாறு எனில் குழந்தை உணர்வு வழி ஏற்றத் தாழ்வில்லாததே. புறத்தே அதன் உருவ அமைப்பும் நிறமும் மாறுபாடாகத் தோன்றுமே தவிர அகத்தே எல்லாக் குழந்தைகளும் உணர்வூறும் வகையில் ஏறத்தாழ சமமே. சான்றாக பால் வேண்டுமென்று அழுவதிலும் சுற்றுச் சார்பு முரண்பாட்டால் அழுவதிலும் தங்களின் உணர்வை வெளிப்படுத்துவதில் குழந்தைகள் ஒரே மாதிரியாகவே இயங்கும் என்பது தெளிவு. அக்குழந்தை வளர வளர சுற்றுப்புறச் சூழல்களாலும் பழகும் நண்பர்களாலும் அதன் குணங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் தன்னளவில் தனது உணர்வில் மற்றவர்களோடு ஒன்றாக இருப்பதைக் காண முடியும். இதன் நுண்ம வேறுபாட்டையும் ஒருமை இயல்பையும் மெய்யறிவால் தனது உணர்வினை நடுநிலையான் உணர வல்ல மெய்யறிவாளர்க்குத தெளிவாகப் புரியும்.
தொடரும்...

புதன், 8 ஜூலை, 2009

அறியாமை பெற்றதுதான் அறிவென்பது

அறியாமை பெற்றதுதான் அறிவென்பது - அதைப்
புரியாமல் வாழ்வதுதான் புதிர் என்பது
(அறியாமை )

விழியாலே நீர்சிந்தி மனம் வாடலாம் - அந்த
விழிகொண்ட பிறர் உன்னை நகையாடலாம்
அழுதாலே மனத்தூய்மை பெறும் உண்மையை - மனம்
அறிவார்கள் சிலரேனும் நிலைத்தன்மையை !
(அறியாமை)

பொன்னோடு பொருள் யாவும் நிலையாகுமா - புகழ்
பொருந்தாத செயல் யாவும் பொதுவாகுமா?
அன்புக்குப் பகை என்றும் எதிர்ப்பாவதேன்? - இறை
அருள் எல்லாம் சிலர்க்கின்னும் இருளாவதேன்?
(அறியாமை)

நினைவாகும் ஒவ்வொன்றும் வினையாவதா? - அது
நிகழ்கின்ற காலத்தின் விதி என்பதா?
மனம் வேறு குணம் வேறு பொருள்தான் இங்கே! - இதை
மதியாலே உணர்ந்தாலே இருள்தான் எங்கே?
(அறியாமை)

பாவலர் திருமாலனார்

வியாழன், 2 ஜூலை, 2009

நினைத்தால் எதையும் சாதிக்கலாம்


நினைத்தால் எதையும் சாதிக்கலாம் - இந்த
நிலத்தையே கைக்குள் அடக்கிலாம்
வெற்றி என்பது உனக்குள்தான் - பெரு
வேதனை ஏனடா உரம் கொளடா!


(நினைத்தால்)
பாய்மரக் கப்பலில் உலகளந்தான் - அந்த
பனிமலை சென்று கொடி பொறித்தான்
எரியும் நெருப்பையே எரித்தவன்தான் - இவ்
விரி நிலத்தில் பெயர் பதித்தவன்தான்
(நினைத்தால்)


ஏழ்மை என்பது பனித்துளிதான் - ஒரு
கீழ்நிலை என்பது இடைநிலைதான்
உழைப்பினை செய்யடா உயர்படிதான் - எந்த
ஊருக்கும் நீ இனி முதல் வரிதான்
(நினைத்தால்)

வானத்தைப் பார் அதற்கெல்லை இல்லை - வான்
நிலவினில் நுழைவதற் கென்ன தொல்லை
மானத்தை நாட்டிடத் தடைகள் இல்லை - மன
ஊனத்தை போக்கிடு பகைகள் இல்லை

(நினைத்தால்)
இரா.திருமாவளவன்